Thursday, April 13, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11



எதையும் எதிர்கொள்... எல்லாம் எளிதாகும் .

                         புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல அன்றைய  மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களைப் பார்த்ததன் விளைவு பல உத்திகளை நாடகத்தில் கையாள வேண்டும் என்று என்னை உந்தித் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.

              விரலுக்குத் தகுந்த வீக்கமென்றால் சரி. திரைப்பட நுட்பங்களை மேடை நாடகத்தில் அரங்கேற்றுவதில் அத்தனை எளிதானதல்ல என்பது  இந்த நாடகத்தில் பட்ட பிறகுதான் உரைத்தது.

            துப்பாக்கி சுடும் ஒலி இயல்பாக இருக்க வேண்டும். அதையும் முன்னர் வெளிப்படுத்தாமல் நிறை ஒத்திகை( grand reharsal ) அன்று செய்து காட்டி அசத்தலாம் என்று நான் நினைத்ததன் விளைவு  அப்படி  ஒரு சிக்கலை உருவாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

                  வேட்டைத் துப்பாக்கியில்  ரவைகள் போடாமல் வெறும் கருமருந்தைப் போட்டு  வெளிப்பக்கமாக வெடிக்கச் செய்யப் போவதை காட்சியில் நடிக்கும் நடிகையிடமாவது முன்னரே நான் கூறியிருக்க வேண்டும். அதிலும் வேட்டைக்காரர் இரட்டைக்குழல் துப்பாக்கியின்  இரண்டு விசைகளையும் தவறுதலாக அழுத்த இரண்டு குழாய்களிலும் நிரப்பியிருந்த மருந்து ஒரே நேரத்தில்  வெடித்த சத்தம் அந்த பயிற்சி அறைக்குள் இருந்த அத்தனை பேரையும் அதிரத்தான் வைத்தது.

                 அதிலும் கதாநாயகி நடிகை அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியபடி விழவும்  எல்லோரும் கொஞ்ச நேரம் உறைந்துதான் போனோம்.  முதலில் ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் பயந்து விட்டார். கொஞ்சம்  தண்ணீர் முகத்தில் தெளித்து, தேநீர் கொடுத்தால் சரியாகிவிடும் என்று நடிகையை ஏற்பாடு செய்து அழைத்து வந்த நண்பர் சொல்ல, அப்படிச் செய்த பின்னரும் வலி தாளாமல் நடிகை சுருண்டு படுத்து அரற்றியதும் எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

                  உடன் வந்த  அவருடைய இளைய  சகோதரி( அவரும்  அந்த நாடகத்தில் நகைச்சுவை பாத்திரமேற்று நடிப்பவர் )  வலியால் துடித்த நடிகையிடம் தனியாக ஏதோ கேட்டுவிட்டு “ உடனடியாக ஒரு மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்ல வேண்டும்”  என்றார்.  இரவு மணி 1.30.அந்த நேரத்தில் எந்த மருத்துவரைத் தேட முடியும்? அந்தப் பகுதியில் அப்போது இரவி என்ற மருத்துவர் ஒருவர்தான் குடியிருந்தார். அவரிடம் அழைத்துப் போகலாமா என்று கேட்டதற்கு அவரின் இளைய சகோதரி. “இல்லை ஒரு பெண் மருத்துவரிடம்தான்  உடனடியாகக் காட்ட வேண்டும்” என்று பரபத்தார்.

                    இப்போதென்றால் பெரியார்நகர், கம்பன் நகரில 7,8 பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்போது அது   புதுவயல் என்ற பெயரில்  வெறும் வயல்வெளியாகத்தான் இருந்தது. எப்படியும் 2 கி.மீ க்கு அப்பாலுள்ள நகருக்குள்தான் கொண்டு சென்றாக வேண்டும். இப்போது போல ஆட்டோ, டாக்சிகள்  அந்தப் பகுதியில் அதிகமில்லை. மன்ற உறுப்பினர் நாக.செயராமன் மட்டும் ஒரு லூனா வண்டி வைத்திருந்தார். அதில் அந்த நடிகையைக் கொண்டு செல்ல முடியாது என்று இளைய  சகோதரி சொல்ல. இரயில்  பயணிகளை நம்பி  தகரக் கொட்டகை ஒன்றில் ஒரு வில்வண்டி ( மாட்டு வண்டிதான்)  வைத்திருந்த வால்பூசாரி என்பவரை அமர்த்தினோம்.

                   அப்போதுதான் தொடங்கியிருந்த மகளிர்க்கு ஒரு தனியார் மருத்துவமனை. ( பெயர் வேண்டாம். இப்போது அவர்கள் மகளிர் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது.) அந்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றோம். நன்றிக்குரிய அப்பெண் மருத்துவர் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லை.  ஒருநாள் உள்நோயாளியாக இருக்க வேண்டுமென்றார்.  மறுநாள் நாடகம் .  இரயில்வே ஸ்டேசன் சாலையை முக்கால் பகுதி ஆக்கிரமித்து மேடை அரங்கம்  அன்று மாலையே போட்டாகிவிட்டது. ஒரு இரவுமட்டும் தொடர்வண்டி நிலையம் செல்லும்  நகரப் பேருந்தை  முன்னதாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட வேண்டிக் கொண்டிருந்தோம். மறுநாள் 15.01.1969  காலை கொட்டகை பிரித்தாக  வேண்டும். பட்டிமன்றப் பேச்சாளர்கள் வேறு  மறுநாள் திருவள்ளுவர் நாளன்று வேறு இடங்களில் பேச தேதி வாங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கதாநாயகி மருத்துவ சிகிச்சையில். என்ன செய்வது?  வேறு நடிகையை ஏற்பாடு செய்து ஒரு பகலுக்குள் பயிற்சியளித்து நடிக்க வைக்க முடியுமா?  நாடகத்தை தள்ளி வைப்பதா? தள்ளி வைத்தால் மீண்டும் எடுத்தக் கூட்டி நடத்த ஏற்படும் கூடுதல் பொருளாதாரத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வது?

                      இப்படியான எங்களுடைய இக்கட்டான நிலையை ,அந்தப் பெண் மருத்துவரிடம்  தயங்கித் தயங்கி எங்கள் மன்ற உறுப்பினர் நாக.செயராமன் சொல்ல, மருத்துவரும்  நடிகைக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சிநோய்க்கு ஓய்வுதேவை. நாளை மதியம் வரை பார்க்கலாம், தளர்ச்சி நீங்கி இயல்புநிலைக்கு திரும்பிட்டா அதிக அலட்டல் இல்லாமல் அவர் நடிக்கலாம். என ஆறுதலான வார்த்தைகள் சொன்னார். “எந்த அளவுக்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்யுங்கள் செலவைப் பத்திக் கவலை வேண்டாம்” என்ற வேண்டு கோளோடு அவருடைய சகோதரியையும்  செயராமனையும்  உடனிருக்கச் சொல்லிவிட்டு நான் திரும்பிவிட்டேன் குழப்பத்திலிருக்கும் உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல.

             மறுநாள் முத்தமிழ்விழா நடத்துவதா தள்ளிவைப்பதா? என   ஒரு முடிவுக்கு வரஇயலாமல் விடியும்வரை குழம்பிய மன்ற உறுப்பினர்களிடம்  “எது நடந்தாலும் சமாளிப்போம். நாளை நல்ல பொழுதாய் விடியட்டும் நமக்கு” என்று கூறிவிட்டு  மீண்டும் மருத்துவமனை சென்றேன். 

                  குளுகோஸ் ஏறியவாறு தூங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை காலை 7 மணிக்கு  கண் விழித்த போதுதான்  எனக்கு நல்ல மூச்சு வந்தது. “எப்படிம்மா இருக்கு இப்ப?” எனக் கம்மிய குரலில் கேட்ட எனக்கு அந்தப்பெண்
 “ ஒன்னுமில்லை சார். மத்தியானம் வரைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டா நார்மலாயிடுவேன். திட்டமிட்டபடி நாடகத்தை நடத்திடலாம்” ன்னு  தைரியம் சொன்னபோது என் கண்கள் என்னையறியாமல் பனித்தன.

                         அவருடைய சகோதரியும் அதையே வழிமொழிய, உடல் நலம் பாதித்த நிலையிலும்  தமிழர் திருநாளில் ஏற்பாடு செய்த ஒரு பொது நிகழ்ச்சி தங்களால் தடைப்பட்டுவிடக் கூடாது எனத்  தன் வலியையும் பொறுத்துக் கொண்டு “நடத்திடலாம்“ என்று ஊக்கமளித்த அந்த இலங்கைச் சகோதரிகளின் மனித நேயப் பண்பாட்டை  நினைக்கும் போது இன்றும்  ஈழ மகளிரின் இனமான மனிதநேயத்தை எண்ணி வியக்காமல் என்னால் இருக்க முடியாது.

                    புதிய உற்சாகத்தோடு திரும்பி  மன்ற உறுப்பினர்களைக் கூட்டி  இலங்கைச் சகோதரிகளின் உறுதிப்பாட்டைச் சொல்லி, திட்டமிட்டபடி முத்தமிழ் விழாப் பணிகளைத் தொடர முனைந்தோம்.  கதாநாயகனும் காமெடியனும் தங்களுடனான டூயட் காட்சிகளுக்கான பயிற்சி  முழுமை பெறாமலிருப்பதைத் தயக்கத்துடன் சொன்னார்கள்.   இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து விடலாமா என நான்  கேட்க, அவர்கள் பெண்ணோடு ஆடிப்பாடும் வாய்ப்புப் பறிபோகிறதே எனத்  தயங்க “ சரி  உங்களுக்கு எப்படி ஆட வருதோ அப்படி ஆடுங்கள். கதாநாயகிக்கு மட்டும் அதிகம் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”  என்று உரிமையளித்தேன்.

                     காலை 11.00 மணிக்குத் திட்டமிட்டபடி நன்கொடை பரிசுச் சீட்டுக் குலுக்கலை நிதிக்குழு  நடத்தியது. அரங்க அமைப்பு  , ஒலி ஒளி , சிலைடு, ஒப்பனையாளர்களுக்கான வழிகாட்டலைச் செய்து கொண்டிருந்தாலும் நடிகையர் மாலை 6 மணியாகியும் வராதது மனதுக்குள் கம்பளிப் பூச்சியாய் அரிக்கத் தொடங்கியது.  

                                 இன்னிசை நிகழ்ச்சியைத் தொடங்கும்  நேரமும் கடந்து கொண்டிருந்தது. இசைக்குழு பாடகி பாடகர் தயாராக இருந்தனர். பட்டிமன்றப் பேச்சாளர்களும்  வந்துவிட்டனர். பட்டிமன்ற நடுவர்  “இன்னும் கச்சேரியே ஆரம்பிக்கலையா? எப்ப கச்சேரி முடிச்சு எப்ப நாங்க பட்டிமன்றம் பேசுறது?” ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். மருத்துவமனையிலிருந்து இன்னும் நடிகைகள் வரலியேன்னு தவிச்சுக்கிட்டிருந்த நான் அவரோட கேள்வியையும் அலட்சிப் படுத்த முடியாம இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கச் சொல்லிட்டு  பக்கத்துப் பிசிஓ மூலம் அந்த மருத்துவ மனைக்குத் தொடர்பு கொள்ள ஓடுனேன். ( அப்ப ஏது செல்போனெல்லாம்)  அந்த நேரத்தில் ஒரு வாடகைக் காரில் நடிகையர் இருவருடன் வந்திறங்கினார் ஒருங்கிணைப்பாளர் நாக.செயராமன்.

                     மனசு நிம்மதியோட அவங்களை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் காபி கொடுத்து கொஞ்சநேரம் ஓய்வெடுக்கச் சொல்லிட்டு மீண்டும் மேடைக்கு வந்தப்ப, இன்னிசை நிகழ்ச்சி அருமையா நடந்துக்கிட்டிருந்துச்சு. பட்டி மன்ற நடுவர் என்னைக் கூப்பிட்டு  “கச்சேரியை முடிக்கச் சொல்லுப்பா. பட்டிமன்றம் தொடங்கணும்” ன்னார். திருச்சியிலேருந்து  பணம் கொடுத்துக் கூட்டிவந்த பிச்சை குழுவினரை ஒரு மணிநேரத்துக்குள்ளே முடிக்கச் சொல்லி மேடையிலேறிக் காதைக் கடிக்க , மனசில்லாம அவரும் அடுத்த பாட்டோட கச்சேரிியை முடிச்சார்.

                     அடுத்து பட்டி மன்ற நடுவர், பேச்சாளர்கள் பற்றிய அறிமுகம் செய்ய மேடைக்குப் போன என்னை ஒப்பனையாளர் மறிச்சு “ எப்ப ஒப்பனை ஆரம்பி்க்கிறது? ன்னு ஒரு கொக்கியைப் போட்டார். மரபுப்படி இயக்குநரை வச்சுத்தான் ஒப்பனையை வழிபாட்டோடு தொடங்குறதுன்னு அவர் அடம்பிடிக்க, பட்டிமன்றப் பேச்சாளர் அறிமுகத்தை முடிச்சிட்டு, ஒப்பனை அறைக்குள்ளே நுழைஞ்சு  நடிகர்கள் ஒப்பனையை  ஆரம்பிக்கச் சொன்னேன். .

நடிகையர் தனியா ( ஒரு போர்வை மறைப்புதான்) ஒரு இடத்துல ஒப்பனையை முடிக்க , பட்டிமன்றம் முடிஞ்சது பத்தரைக்கு.

               நாடகத்துல முதல் காட்சி ஒரு செல்வந்தர்  தன் வீட்டில் தூக்கில் தொங்குறதாகவும், அவரைத் தேடிவர்ற அவரோட மகள் தலையில், தொங்குகிறவர் கால்கள்   இடிக்க  நிமிர்ந்த பார்த்து ,மகள் அலறி மயங்கி விழுவதாகவும் அமைச்சிருந்தேன்.

                   அதிர்ச்சிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ள பெண்ணுக்கு இந்த அதிர்ச்சியான காட்சியை வைப்பதா, நீக்கிடலாமா ? ன்னு நடிகையிடம் கேட்ட போது  கதையோட சஸ்பென்சே அந்த முதல் காட்சிதான். அதை நீக்குனா கதை புரியாது, நாடகத் தொடர்ச்சியும் இருக்காதுசார். இருக்கட்டும் நா நடிக்கிறேன்னுச்சு.

                  உள்ளுக்குள்ளே எனக்கு உதறல் . இருந்தாலும்  இவர் எப்படிச் செத்தார் ன்னு துப்பறியும் கதை என்பதால் காட்சியை வெட்டாமல் நடத்த ஏற்பாடு செஞ்சு  தூக்குக்கயிறை கொட்டகையின் மூங்கிலில் மாட்டி, தூக்கில் தொங்குறவர்க்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிச்சுகள் போட்டு கழுத்தில் கயிற்றை மாட்டி தொங்கவிட்டாச்சு. திரை விலகியதும் தொங்கும் கால்களில் மட்டும் வெளிச்சம் பாய்ச்ச ஒளியமைப்பாளர்க்கு அறிவிப்பு கொடுத்திருந்தேன். 
திரையை விலக்கும் முன் ஒளியமைப்பாளர் செல்வின் வந்து “தெரு முச்சந்தியில் எரிந்து கொண்டிருக்கும் மெர்குரி விளக்கை அணைச்சாதான் கால்மட்டும் தெரியுறமாதிரி லைட் அடிக்க முடியும் . இல்லேன்ன மேடை முழுதுக்கும் அந்த வெளிச்சம் வரும்.”ன்னாரு
அந்தப் பகுதிக்கே அந்த ஒரு பச்சை விளக்குதான் பரவலான வெளிச்சம் தர்ற்து. அதை தெரு விளக்குப் போடுற நகராட்சிப் பணியாள் வந்தாத்தான் போடவோ, நிறுத்தவோ முடியும். இதை யோசிக்காம விட்டுட்டோம்.
தயக்கத்தைப் பார்த்த எங்கள் மன்ற உறுப்பினர் ( மின் நுட்பாளர்தான்) விறுவிறுன்னு மின் கம்பத்துல ஏறி ப்யூஸ் கட்டையைக் கழட்டிட்டு வந்துட்டான். இப்ப அரங்கமும் பார்வையாளர்களும் இருளில் .

               ஒருவழியா திரை விலகியது.  தொங்கும் கால்கள் மட்டும் தெரிவதுபோல் ஒளி பாய்ச்சப்பட்டது.  அங்கு வந்த மகள் தலையில் கால்கள் தட்டுகிறது. மகள் கால்களைப் பிடித்துக் கதறி மயங்கி விழவேண்டும் . உணர்ச்சி வசப்பட்ட நடிகை தொங்கிய அப்பா நடிகரின் கால்களை இறுகப்பற்றி இழுத்ததில் கொட்டகை பந்தலில் உறுவாஞ்சுறுக்கு போட்டிருந்த கயிறு உறுவத் தொங்கிக் கொண்டிருந்தவர் அப்படியே நடிகைமீது சரிந்து விழுகிறார்.  பார்வையாளர்களுக்கு இது பிரமிப்பான காட்சி. ஆனால் எங்களுக்கு?
                                 
                                                                      --- தொடரும்.







2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எத்துனை எத்துனை இடைஞ்சல்கள்
காத்திருக்கிறேன் ஐயா
அடுத்த பதிவிற்காக

இராய செல்லப்பா said...

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று பாடியிருப்பீர் களே!
-இராய செல்லப்பா நியூஜெர்சி

Post a Comment