Saturday, April 15, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12

                  

முள்களைந்து சுவைத்த சுளை

                     நாடகத்தின் முதல் காட்சியை திகிலோடு ஆரம்பிக்க நினைத்த நான், தூக்கில்  தொங்கிக் கொண்டிருந்த நடிகர் கயிறு உறுவி நடிகை மீது விழுந்ததில், அப்படியே  திகைத்துப் போய் நின்றேன்.    முன்திரையை மூடிவிட்டு  முதலில் அந்த பெண்ணிற்கு ஏதும் பாதிப்புள்ளதா எனத்தான் பார்த்தேன்.   நல்லவேளை  தூக்கில் தொங்கிய நடிகர் ( காளிமுத்து ) மெலிந்த உடலும் குறைந்த எடையும் உள்ளவராய் இருந்ததாலும், விழுந்ததில் நடிகைக்கோ அவருக்கோ பெரிய பாதிப்பு எதுவுமில்லாமல் போயிற்று.

                இத்தனைக்கும்  மேடைத் தளப்பொறுப்புக்கு இருவர், அரங்கப் பொருள்கள் வைத்து அகற்ற இருவர், அடுத்தடுத்த காட்சிகளில் நடிக்க வேண்டியவர்களைத்  தயார்படுத்த ஒருவர், ஒப்பனைகளில் மாற்றமிருந்தால் உடனுக்குடன் செய்ய ஒப்பனையாளருடன் உறுப்பினர் ஒருவர், வசனத்தை மறந்து விடாமல எடுத்துக் கொடுக்க ஒருவர் என நாடகத்தில் நடிப்பவர்களை விட அரங்க நிர்வாகப் பணிக்கு மேடை நாடகத்தைப் பொறுத்தவரை அதிக ஆள்களையே அமர்த்தியிருந்தேன். 

                  இதல்லாமல், இசை அமைப்பாளர்க்கு, காட்சி உரையாடல்  களுக்கேற்ற சிறப்பு ஒலிகள் பற்றிய ஒரு குறிப்பு, ஒளியமைப்பாளர்க்கு அதேபோல் காட்சிக்கேற்ற வண்ணஒளி பற்றிய குறிப்பு , திரை இயக்குபவரிடம் காட்சி எண், அதற்குரிய திரை பற்றிய குறிப்பு, ஒலி அமைப்பாளரிடம் பாடல்கள் பதிவு செய்த ஒலிநாடாவை எந்தெந்த காட்சிகளில் இயக்க வேண்டும்  ஆகிய குறிப்புகளையெல்லாம் எழுதி முதல்நாள் முழு ஒத்திகையின் போதே கொடுத்து ,அதன்படி அவர்கள் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தேன். இப்படி என்னதான் முன் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் எதிர்பாராமல் மேடையில் ஏற்படும் குளறுபடிகளையும் கடந்துதான் மேடை நாடகத்தை நடத்தி வெற்றி காண முடியும்.

                  தொங்கவிட்டிருந்த  கயிறு உறுவி தன் மீது அப்பா நடிகர் விழுந்ததால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும்,  உணர்ச்சி வேகத்தால் தன்னால் ஏற்பட்ட தவறு என்பதை உணர்ந்த அந்த நடிகை பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே “ சாரி சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார். “கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கம்மா” ன்னு சொல்லிட்டு  நான்காவது காட்சியை அடுத்து போடவேண்டிய சிலைடு   (நாடகம், நடிப்பவர், தொழில்நுட்பாளர் பற்றிய விளம்பரம்)  நிகழ்ச்சியை  உரிய தொழில் நுட்பாளர்களிடம் அறிவுறுத்தி  வெண்திரையில் ஒளிப்படக் காட்சியாக ஓடவிட்டேன். இந்த திடீர் மாற்றத்தால் இடைவெளி நேரம் கொஞ்சம் அதிகமானாலும், அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நடந்தன.

                இந்த நாடகத்தில் இன்னொரு நகைச்சுவையான நிகழ்வும் எதிர்பாராமல் நடந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். துப்பறியும் இந்த மர்ம நாடகத்தில் ஒரு துப்பறி நிபுணர்( சி.ஐ.டி சிங்காரம் ) மாறு வேடத்தில் ( கைரேகை சோதிடர் கைலாசமாக ) இடையிடையே நகைச்சுவை பாத்திரமாக வந்து கொண்டே இருப்பார். அந்த வேடத்தை  பொன்.பாலசுப்பிரமணியன் ( இன்றுவரை மணிமன்றத் தலைவராக இருப்பவர்) ஏற்று சிறப்பாக செய்து பார்வையாளர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டே வந்தார்.

               நாடகத்தின் உச்சகட்டக் காட்சி.  கதைஎதிர்த் தலைவன் ( வில்லன் ) தான் செய்த கொலையை நேரில் பார்த்த முதியவர் ஒருவரை ஒரு மலைக்   குகைக்குள் ஒரு பாறைக்   கல்லோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருப்பான்.  அந்த இடத்தைத் துப்பறிந்து அங்கு கைரேகை சோதிடர் வேடத்தில் வருவார் துப்பறியும சிங்காரம் 

              காவலுக்கு இருந்தவர்களிடம்  ஓரிடத்தில் புதையல் இருப்பதாகப்  போக்குக் காட்டி வெளியே அனுப்பிவிட்டு,  கட்டிக்கிடந்த  கிழவன் உடைகளைத் தான் மாற்றி அணிந்து கொண்டு , கிழவனைக் கட்டி இருந்த பாறையில் தன்னைப் பொய்க்கட்டு கட்டிப் போடச் சொல்லி, அந்தக் கிழவனை விடுவித்து போலீசை அழைத்துவர அனுப்பிவிடுவான் சி.ஐ.டி.  கிழவன் சென்ற சற்று நேரத்தில் வில்லன் அங்கு வந்து கட்டிக் கிடந்த கிழவனை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொல்லப் போவதாய்க் கொக்கரித்துக் கொண்டு மண்ணெண்ணை டின்னோடு கிழவனை நெருங்குவான். 

              கதைப்படி அந்தக் கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி தனது பொய்க் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தான் அணிந்திருந்த ஜிப்பாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வில்லனின் கையில் சுட வேண்டும். பிறகு காவல்படை வந்து வில்லனைக் கைது செய்யும்.

              காட்சியில் வில்லன் மண்ணெண்ணை டின்னை த் திறந்து கொண்டு கிழவனை நெருங்குகிறான். கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி சிங்காரமாக நடித்தவர்  போலிக் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார். அதிர்ச்சியடைந்த வில்லன் எண்ணை டின்னை வீசிவிட்டுத் தன் இடையில் சொருகியிருந்த கத்தியை எடுக்கிறான். சி.ஐ.டி தனது ஜிப்பாவின் சைடு பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துப்பாக்கியை எடுக்க முயல்கிறார்

             துப்பாக்கியின் விசை பாக்கெட்டில் இருந்த பிசிர் நூலில் மாட்டிக் கொண்டு வெளியே எடுக்க வரவில்லை.  ( நாடகத்திற்காக அவசர அவசரமாகத் தைத்த புது ஜிப்பா பிசிர் நூல்களைக் கத்தரிக்க தையல்காரர் மறந்து விட்டார்.)  

            துப்பாக்கியை எடுத்து  நீட்டட்டும் என்று  துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளப்ப வேண்டியவர் காத்திருக்கிறார்.   பரபரப்பு இசை ஒலிக்க ஆர்மோனியம் ஹென்றி சாரும் தயாராக இருக்கிறார்.( மின்னணு கீ போர்டெல்லாம் அப்போதில்லை ) வில்லன் நடிகரும் சூடுபட்ட இடத்தில் இரத்தத்தை வழியவிட  சிவப்புச் சாயத்தை இடது கையில்  எடுத்துத் தயாராகி விட்டார். ஒளியமைப்பாளரும் சிவப்பு ஒளி பாய்ச்ச துப்பாக்கி வெளிவரும் அந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கிறார். சி.ஐ.டி.யாக நடித்தவர் துப்பாக்கியை இரண்டு முறை இழுத்துப் பார்க்கிறார் . நூலில் வசமாய்ச் சிக்கிக் கொண்ட துப்பாக்கி பையைவிட்டு வர மறுக்கவே, பைக்குள் கையைவிட்டவாறே துப்பாக்கியை சட்டையோடு தூக்கி வில்லனுக்கு நேரே நீட்டி  “டொப்” என்று  சுடும் சத்தத்தையும்  தானே வாயொலியில் கொடுத்து விட்டார்.  வில்லனாக நடித்தவரும் அதற்கேற்ப கத்தியைக் கீழே போட்டுவிட்டு  இரத்த நிற சாயத்தை வலது மணிக்கட்டில் தடவிக்கொண்டு அலற, அதற்கடுத்து உண்மையான துப்பாக்கிச் சூடு சத்தமும்,  ஒளி,இசை அதைத் தொடர பார்வையாளர் பகுதியில் ஒரே ஆரவாரம். பாராட்டியா? பகடி செய்தா? தெரியவில்லை. ஆனால் நாடக இயக்குநர் மனசு பட்ட பாட்டை மேடை நாடகம் நடத்தி அனுபவித்தவர்களே உணர்வர்.  தொடர்ந்து காவல் துறை வந்து வில்லனைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்படுத்துவதாகக் காட்சி.

              நீதிமன்ற அரங்க அமைப்பும் வழக்காடு நிரலும்  நாடகத்தின்  சில்லறைச் சிக்கல்களை மறக்கடித்து அனைவர் பாராட்டுகளையும் பெற்று  வெற்றியாக அமைந்தது. முட்களாய் இருக்கும்  தோலைக் களைந்துதானே பலாச்சுளையின் இனிமையைச் சுவைக்க முடியும். அப்படித்தான் அமைந்தது முத்தமிழ்விழா.

                                  ---- இன்னும் பல சுவையாய் வரும்.


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எத்துனைத் துன்பப் பட்டாலும்
நாடகம் வெற்றி வெற்றி
மகத்தான வெற்றி
வாழ்த்துக்கள் ஐயா

Chellappa Yagyaswamy said...

பத்தி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வண்ணம் கொடுத்திருப்பது கண்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது நண்பரே! நீலம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரே வண்ணத்தை முழுப்பதிவிற்கும் கொடுப்பது நலம். அருமையான தொடர்.எவ்வளவு துன்பங்கள் உங்களுக்கு!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Post a Comment