Tuesday, April 18, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13


         
ஆட்டுவித்ததும் ஆடித் தீர்த்ததும்...

            எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது   சமூக மேம்பாட்டிற்கான ஏதேனும் ஒரு சிறிய செய்தியையாவது  உட்கருவாகக் கொண்டு படைக்கப்படவேண்டும் என  நினைவில் வாழும் எனது ஆசிரியர் திரு கரு.செல்லமுத்து அவர்கள்  நான் எட்டாம் வகுப்புப் பயிலும்போது சொன்னதை மறக்காமல் நான் எனது பாடல்கள், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் மூலம் செயலாக்கம் செய்து வந்துள்ளேன்.

           பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்லன விளைத்தற்கே என்று  சங்கரதாசு அடிகள் கூறியுள்ளதும்,  கலைகள் வெறும் பொழுது போக்கிற்கானதாக மட்டும் அமைதல்  கூடாது என்பதை  மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை உள்ளிறுத்தியே அமைதல் வேண்டும் என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். .  அதிலும் நாடகம் என்பது நாட்டின் அக நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தி  அதற்கான தீர்வைச் சொல்வதாக அமைதல் வேண்டும் என்பார் பம்மல் சம்பந்த முதலியார்.

அந்த வகையில்  மகளிரின்  சமூகப் பிரச்சனையாக காலம் காலமாய் இருந்து வந்த விதவையர்  மறுமணத்திற்கான எதிர்ப்பினையும்  அத்தகு மணங்கள் நடைபெற வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக சமூக சீர்திருத்தவாதிகள் வலியுறுத்தி வந்துள்ளதையும் கதைக் கருவாகக் கொண்டு  “ பட்டமரம்” என்னும் பெயரில் ஒரு சீர்திருத்த நாடகத்தை 1972ல் அரங்கேற்றினேன்.

             கொத்தடிமையாக இருந்த ஒரு தாய், தான் பெற்ற கடனைத் தீர்க்க முடியாமல், இறக்கும் தருவாயில் கொடுத்த வாக்குறுதியால் அந்த வயோதிக செல்வந்தருக்குத் அவர்  மகள்  மணம் முடித்து வைக்கப்படுகிறாள்.  மணம் முடிந்த அன்றே அச்செல்வந்தர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இளம் பெண் விதவையாகிறாள். அப்பெண்ணை விரும்பும்  கதைத் தலைவனின் தனயன், அப்பெண்ணின் சாதியைக் காரணம் காட்டி அவளைத் தன் தம்பி்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறான். அண்ணனை மீறவும் முடியாமல் விரும்பிய விதவையைத் திருமணம் செய்யவும் முடியாத நிலையில்  வீட்டைவிட்டு வெளியேறுகிறான்  கதைத் தலைவன். 

                   தன் குலப்பெருமையையும், தம்பியையும் இழக்க விரும்பாத தனயன்  அப்பெண்ணையும் அவளது தந்தையையும்  ஆட்களை வைத்துக் கடத்தி, அவர்களுக்குப்  பணத்தாசைகாட்டி ஊரைவிட்டு வெளியேற்ற முயல்கிறான். காவல் ஆய்வாளரான கதைத் தலைவனின் தம்பி தன் மூத்த சகோதரனின் சூழ்ச்சிகளை முறியடித்து  கதைத் தலைவனான தன் இரண்டாவது சகோதரனுக்கு அவன் விரும்பிய விதவையையே திருமணம் செய்து வைப்பதுதான் கதை.

                இந்த  மேடை நாடகத்தில்  பல உத்திகளைக் கையண்டிருந்தேன்.   திருமண மேடை, தையல்கடை, மலைக்குகை, காவல்நிலையம், கேளிக்கை நடனவிடுதி, கனவுக்காட்சியில் பின்புல மாற்றங்கள் என்னும் பல அம்சங்களை  இந்நாடகத்தில் காட்சிப் படுத்தி யிருந்தேன்.  அவற்றுக்காகப்  பெரிய மேடை அமைக்க வழக்கமாக நாடகம் போடும் தொடர்வண்டி நிலைய சாலை ஓரம் இடம் போதாமையால் ஊருக்கு வடபுறம் ( புதுவயல் பகுதியில் விளையும்  நெல் அடிக்கும் களம். தற்போது பெரியார் நகராக உள்ளது)  மணல்மேடு என்னும் பெரிய திடலை ஒழுங்குபடுத்தி பெரியதான மேடை அமைத்திருந்தோம்.      
( இப்போது புதுக்கோட்டை வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் குடியிருப்பாக மாறியுள்ளது)  மேலும் புதுக்கோட்டை நகர், மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து  பாய், சாக்குகளோடு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருந்ததால் அந்தப் பெரிய திடலைத் தேர்வு செய்யவேண்டியதாயிற்று.

              மின்சாரத்திற்கு ஜெனரேட்டர் ( மின்னூக்கி ) ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. விரிவான செலவினங்களுக்கு,  மன்ற நாடகத்தின் தன்மையால்  நன்கொடையாளர்கள்  உதவினார்கள். நன்கொடை பரிசுச் சீட்டு மூலம் ஓரளவு நிதி கிடைத்தது.

             இந்நாடகத்தில் முதல்காட்சிக்கு அமைத்த திருமண அரங்கத்தைப் பிரித்து அடுத்த காட்சி தொடங்குவதற்குச் சற்றுத் தாழ்வு ஏற்பட்டது. அந்த இடைவேளையைப்  பாடகி ஜானகி தன் இனிய பாடலால் நிரப்பி உதவினார்.

                ஒரு விதவையின் வேதனைக் கதையைச் சோர்வில்லாமல் நகர்த்த,  நான்கு நகைச்சுவைப் பாத்திரங்கள்  கைகொடுத்து உதவின.  
ஒரு தையல் கலைஞன்,  அவனது காதலி, காசா எடுக்கும் உதவிப்பையன், கறிக்கடை  பாய்,   பாகவதர்,  போலீசு என்ற பாத்திரங்கள் வழங்கிய நகைச்சுவை நடிப்பு நாடகத்தை விறுவிறுப்பாக்கியது .  

                இதில் குறிப்பிடத்தக்க சில  புதிய உத்தி நுட்பங்களைச் சோதனை முயற்சியாகச் செய்திருந்தேன்.  சோகப்பாடல் காட்சியி்ல் கதைத்தலைவி வீட்டுப்  பின்புலத்திலும், அவளின் தந்தை காட்டுப் பின்புலத்திலும்  வேதனைப் படுவதாக , ஒரே மேடையை இருபிரிவாக்கி காட்சிப் படுத்தியிருந்தேன்.  ஒளிப்பதிவு நுட்பத்தால் செல்வின் பின்புலங்களை வேறுபடுத்திக்காட்டியது  சிறப்பாக அமைந்த ஒன்று.

                 அதேபோல கதாநாயகன்  கதாநாயகியோடு மகிழ்ந்து ஆடிப்பாடுவதான காதல்காட்சியில்,  தண்ணீரில் மிதக்கும் தாமரை செட்டிங்கில் காதலர், வான் நட்சத்திரங்கள்,மேகக்கூட்டத்திலிருக்கும் பிறைநிலவில் காதலர்,  பெய்யும் மழையில் நனைந்தபடி காதலர் என மூன்று பின்புலங்களை பாடல் இடையிசைக்குள் மாற்றிக் காட்டிக் காட்சியமைத்திருந்தேன்.  பாடலின்  மூன்று சரணங்களுக்கும் காதலர் இருவரும் வெவ்வேறு உடை மாற்றத்தோடு வரச் செய்திருந்தேன். 

இந்தக் காட்சி பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது.  மழைக்காட்சியில் பி.வி.சி. குழாயில் துளைகளிட்டு அதன்வழியே பம்ப் மூலம் தண்ணீர் பீய்ச்ச, மழை பெய்வது  இயல்பானதாக அமைந்தது. என்ன ஒரு சிக்கல்,   மேடையில் விரித்திருந்த தார்ப்பாயில்  பெய்ய வைத்த செயற்கை மழைநீர் தேங்கியதில்,  கதாநாயகன் நடனமாடும் போது வழுக்கிவிழ, கதாநாயகி அவனைத் தாங்கிப் பிடித்தது  காட்சியை உணர்ச்சிமயமாக்கியது. 

            அடுத்து கதாநாயகியையும் அவளது தந்தையையும்  அடைத்து வைத்த மலைக்குகையை விட்டு  மூன்று பாறைத் திறப்புகள் வழியே வெவ்வேறு  வண்ண ஒளியில் ஒரு மர்ம உருவம் வெளிவருவதான காட்சியை அமைத்திருந்தேன் .  ஒளிப்பதிவாளர் செல்வின் அவர்களின் சீரிய முயற்சியால் அந்தக் காட்சி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றதை மறக்கவே முடியாது.

             இந்நாடகத்தில் ஒரு கேளிக்கை விடுதி  நடன மங்கையுடன் மேற்கத்திய நடனமாட வேண்டிய நடிகர் திடீரென வராமையால், மேலாளர் பாத்திரத்தில் நடித்த நான், அந்த நடனத்தை ஆட  வேண்டியதாயிற்று. 

இதைவிட இன்னொரு நெருக்கடியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று.

                 சுடுகாட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த மலைக்குகையில் அடைத்து  வைத்துள்ள கதாநாயகி மற்றும் அவரது அப்பாவைக் கண்டுபிடிக்க தையல்கடை வீரமுத்து  கசாப்புக் கடை பாய், போலீசு 123 ஆகியோர் போவார்கள். காட்டுப் பகுதியிலிருக்கும் அந்த இடத்திற்கு வழி தெரியாமல் அவர்கள் தவிக்கும்போது,  சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டுத் திரும்பும் ஊழியர் இருவரிடம் , சுடுகாடுவரை வந்து குகையைக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்க, அவர்கள் பிணமில்லாமல் சுடுகாட்டுக்குவரமாட்டோம் என்பார்கள். உடனே  டைலர் வீரமுத்து அந்தப் பகுதியில் கிடந்த பாடை ஒன்றை எடுத்துவந்து  அதில் தானே பிணமாகப் படுத்துக் கொண்டு சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லச் சொல்வான்.   

              அந்தக் காட்சிக்குப்  பறைமுழக்க, தொழில்முறை ஊழியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். காட்சிக்கு அவரைத் தேட , அவர் மதுபோதையில் அரங்குக்கு  பின்பகுதியில் நிதானமில்லாமல் சாய்ந்து கிடந்தார். எவ்வளவு உசுப்பேற்றியும் அவரைத் தெளிய வைகக முடியாததால் நானே சட்டை பேண்டைக் கழற்றிவிட்டு வேட்டி துண்டுக்கு மாறி, பறையை அடித்துக் கொண்டு செல்லவேண்டிய தாயிற்று .  பாடமேற்பார்வை ( பிராம்ப்ட்) பார்த்துக் கொண்டே கவுரவத் தோற்றத்தில் இப்படிப்பட்ட நெருக்கடிகளையும்  ஆட்டுவிக்கும் நாடக இயக்குநர் ஆடிச்சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மேடை நாடகத்தில் பலப்பல. 

                                                          ---அவை பற்றி அடுத்த தொடரில் 


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பெரும் முயற்சிகள் கண்டு வியக்கிறேன் ஐயா
தனியொரு நூலாய் வரவேண்டிய பதிவு ஐயா

Chellappa Yagyaswamy said...

இவ்வாறான பலதரப்பட்ட அனுபவங்களை ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் பகிராமல் இருந்தீர்கள்? நல்லவேளை, வலைப்பதிவு தொடங்கினீர கள். இல்லையெனில் உங்கள் உழைப்பையும் முயற்சிகளையும் மக்கள் அறியமுடியாமல் போயிருக்கும்.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Post a Comment