Thursday, June 20, 2013

காசநோய் பராமரிப்பு

 ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
               
                   20.06.2013 அன்று புதுக்கோட்டை அரசு பொது மருத்தவமனை காசநோய்ப்பிரிவு கூட்ட அரங்கில் புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையமும், ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து காசநோய் பராமரிப்புக்கான நோயாளிகளின் சாசனம் என்னும் கருத்தரங்கினை நடத்தியது. 
              
                  காசநோய் மருத்துவ இணை இயக்குநர் எஸ.ஆர்.சந்திரசேகர் அவர்கள் கருத்தரங்கத் தலைமையேற்றார். நிலைய மருத்துவ அலுவலர்  தனசேகரன் அவர்கள்  தொடக்க உரையாற்றினார்.  ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.
              
                  காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு புதுக்கோட்டை அமைப்பின் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் காசநோயாளிகளின் சாசனம் பற்றி ஒளிப்பட விளக்கங்களுடன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்  காசநோயாளிகளின் உரிமைகளையும் பொறுப்புகளையும் விளக்கிப் பேசினார்.

                        ஒவ்வொரு காசநோயாளருக்கும்  சர்வதேச அளவில், சமமான பராமரிப்பு இலவசமாக உண்டு என்றார். நோயாளிகள் குடும்பம் மற்றும் சமூகத்தால் கவுரமாக நடத்தப் பட வேண்டும். நோயின் நிலை, சிகிச்சை முறை, மருந்துகளின் பெயர் அளவு ஆகியவை பற்றி தமிழில் நோயாளர்கள் தகவல் கேட்டுப் பெறும் உரிமை உள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
                
                     பராமரிப்பு குறித்தும் நியாயமற்ற சிகிச்சை பற்றியும், பக்க விளைவுகள் பற்றியும் மேல் அலுவலர்களிடம் முறையிடும் உரிமை நோயாளிக்கு உண்டு என்றார்.
ஆய்வுக்காலம் முதல் குணமாகும் வரை தங்களது வருமானத்திற்கான தொழில்பாதுகாப்பு , மற்றும் ஊட்டச்சத்துகள் பெறுவது, தரமான மருத்துவ வசதி கிடைப்பது ஆகியவற்றிற்கான உறுதிபெறும் உரிமையினையும் குறிப்பிட்டார்.

                    அதே வேளையில் நோயாளர்கள் தங்களது நோய் அனுபவங்களை குடும்பம் , நண்பர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதும், நோய் கண்டவரை ஆய்வுக்கு வழிநடத்தலும், தனது நோய்க்கான சிகிச்சையினை இடைவிடாது மருத்துவர் கூறும் காலம் வரை தொடர்வதும்  காசநோயினைக் கட்டுப் படுத்தி சமூக நலனுக்கு ஒத்துழைக்கும் பொறுப்புகளும் நோயாளர்களுக்க உண்டு என்பதை  வலியுறுத்திப் பேசினார்.
                  அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு.லெ.பிரபாகரன்  நோயாளிகளின் கடமைகள் பற்றிப் பேசினார். திட்ட மேலாளர் திரு சி.குமார் அவர்கள் நன்றி கூறினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். நோய் கண்டறியப் பட்ட 26 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு  பயன் பெற்றனர் 

No comments:

Post a Comment