Thursday, March 2, 2017

பழகிய நட்பு எவன் செய்யும்?

நண்பர்கள்.... நண்பர்கள்... நண்பர்கள்.
ஆம் நண்பர்களே இல்லாத மனிதர்கள் இப்புவியில் இல்லை எனலாம்.

அப்படி  நண்பர்கள் யாருமே  இல்லாத மனிதர்கள் நடைப்பிணத்திற்கு ஒப்பாவார்.
அதனால்தான் “ நட்புப் போல் இவ்வுலகில்  செய்தற்கு அரியது ஏதும் இல்லை“ என்கிறது தமிழ்மறை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நண்பர்களைப் பெற்றிருப்பர். அந்த நண்பர்களில் சிலர் தொடர்வண்டிப் பயண நட்பினராக இருக்கலாம். சிலர் விளையாட்டுக்கள நண்பர்களாக இருக்கலாம்.  சிலர் பணியிட நண்பர்களாகவும்  சிலர் இலக்கிய வட்ட நண்பர்களாகவும், சிலர் சமூகச் சேவையில் இணைந்தவர்களாகவும், இன்னும் சிலர் அரசியல் நட்பு வட்டத்தினராகவும் இருக்கலாம். 

ஆனால் ஒரு சிலரே குடும்ப நண்பர்களாகத் தொடர்ந்து பலகாலம் இருப்பர்.

நட்புக்குப் பலகாலப்  பழக்கம் தேவை என்பதில்லை. 
அடிக்கடி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுமில்லை. 
 நேரில் பார்த்துப் பழகாமலேயே கோப்பெருஞ்சோழனின் பண்பு நலனறிந்து  அவன் இறந்த பின்னர்  அவனது புதைகுழியருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்த பிசிராந்தையார் போன்ற காலத்தால் அழியா நட்பினரும் இருந்திருக்கின்றனர்.

அதனால்தான்  “நட்பிற் குறுப்புக் கெழுதகைமை“  என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அவரே எது நட்பு என்னும் வினாவிற்கு  “முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது, மனம் இனிக்கப் பழகுவதே நட்பு“  என விடை பகர்ந்திருக்கிறார்.
எவ்வகையானும் பெற்ற தொடர்பினை முறித்துக் கொள்ளாமல் தொடர்வதே நல்ல நட்பாக இருக்க முடியும்.

நல்ல நட்பு  வளர்பிறைபோல நாளும் வளரும். பண்புடையவர் நட்பு படிக்கப்படிக்கத் தெவிட்டாத நூலின்பம் போலும் என்பது வள்ளுவர் வாய்மொழிகளே.

நாம் சிரிக்கும்போது சிரிப்பவர்கள் மட்டும் நல்ல நட்பினர் அல்லர்.
 நாம் துயருறும்போது நம் கண்ணீரைத் துடைப்பவரே சிறந்த நட்பினர்  ஆவர்.

உடுக்கை இழந்தபோது உடன் விரைந்து செயல்படும் கைகளைப்போல நட்பினரின் செயல் அமைதல் வேண்டும் என்றும்  உரிமையோடு ஒருவர்க்கு நல்லன செய்தலே சிறந்த நட்பு என  நட்பின் சிறப்புகளை திருக்குறளின் பொருட்பாலில் அய்ந்து அதிகாரங்களில் அழகுபடக் கூறியுள்ளார்.
 ஒருவரின் பிறப்பு, இனம், மொழி, பொருளாதாரம் முதலான நிலைகளால் வேறுபடாமல் முடிந்தவரை அவரைத் தாங்கி நிற்பதே நட்பின் உயர்நிலை என்பதும் வள்ளுவமே.

ஆனால் இன்றைய மின்னணு உலக இயக்கத்தில்  நட்பு என்பது வெறும் தொடர்வண்டிப் பயண நட்புகளாகவே மாறிக்கொண்டிருப்பது கண்கூடு.
உறவுபோல நடித்து புறம்பேசும்  முகம்நக நட்பதாகவே பல நட்புகள் காணப்படுகின்றன.
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்“ என இதைத்தான் கூறினரோ?

ஒருவரால் பயன் கிட்டும்வரை அவரைப் புகழ்வதும், அவரின் பயன் அருகிப் போகுங்கால் அவரைப் பிரிவதும் இகழ்வதுமாக நடப்பியலில் நட்பு சிதைவுற்றுப் போயுள்ளது.

பெரிதும் போற்றற்குரிய பண்பாளர்கள். தொண்டாளர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துப் புகழப்படாமல் அவர்களின் மறைவுக்குப் பின்னரே அவர்களின் நண்பர்களால் குடும்ப நிதி அளிக்கப்பட்டும் ,புகழஞ்சலி செலுத்தப்பட்டும், நினைவிடங்கள் உருவாக்கப்பட்டும், அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டும் வரும் நிலைகளை நோக்க
 “பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
 செய்தாங்கு அமையாக் கடை”  என்னும்  குறள் நெறி  பொய்த்துப் போயிற்றோ என எண்ணத்தான் தோன்றுகிறது.

இன்னும் சிலர் பழகிய நண்பர் கெடுவாய்ப்பால் பழிச்சொல்லுக்குள்ளாகும் போதோ, திட்டமிட்டு  அவதூறுகளால் அவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்போதோ அவரோடு கொண்டிருந்த நட்பினை விலக்கிக் கொள்கின்றனர். அவரைத் தனது நண்பர் இல்லை என்று ஒதுங்கிக் கொள்வதும், அவரோடு பேசுவதையே இழிவென்று அவரைப் புறக்கணிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது. 

இன்னும் சிலர் அதுவரை அவர்மீது கொண்டிருந்த நல்லெண்ணங்களுக்கு மாறான செயல்பாடுகளை மேற்கொள்வதும், பின்னாளில் அவர்மீதான அவதூறு பொய்யென்றாகும்போது அவரைத் தேடி நட்புக் கொள்ள முயல்வதும்  இன்றைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையே நினைவு படுத்துகிறது.

ஆராய்ந்து நட்பு கொள்ளுதலும், நட்பு கொண்டபின்னர் அவரை இகழாது   நல்லது கெட்டது அனைத்திலும் அவரைப் பிரியாது துணை நிற்றலுமே நல்ல நட்பினர்க்கான அடையாளங்களாகும்.

எனவே தாமரை இலைத் தண்ணீராக இல்லாது, அக்குளத்து  நீரற்ற காலததும் அகலாதிருக்கும் கொட்டியும் தாமரைக் கிழங்குகளுமாய் நட்பினைத் ்தொடர்வோம். அதுவே தமிழர் பண்பாடு.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முத்தான கருத்துக்கள் ஐயா... நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

இக்காலத்திற்குத் தேவையான கருத்து ஐயா
நட்பு போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தற்போது நட்பு என்பதற்கும் பொருள் மாறிவிட்டது ஐயா.

Post a Comment