Monday, August 5, 2013

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு பொதுக்குழுவில்..

            04.08.2013 அன்று முற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழுவின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் , மாவட்டத் தலைவர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

             புதுக்கோட்டை கவினாடு மேற்கு வட்டம் , மாலையீடு சண்முகா நகர் நுகர்வோர் குழுத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா, செயலாளர் திரு சோமசுந்தரம் ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

            மாவட்டப் பொருளாளர் திருமதி  து.லதா உத்தமன் வரவேற்றார்.

            2012-13 ஆண்டறிக்கையினைப் பொதுச் செயலாளர் க.வேழவேந்தன் அவர்கள் அளித்தார். 2012-13 ஆண்டிற்கான தணிக்கை செய்யப் பட்ட கணக்குகள்  ஏற்பளிக்கப் பட்டது.

           2013-14 ஆண்டிற்கான செயல்திட்டங்கள வடிவமைக்கப் பட்டன.

-- நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் நியமிக்கப்படல் வேண்டும்.
-- புதுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனையில் ஸ்கேன் மையம் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்பட வேண்டும்.
-- நகரப் பெரு வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு நடப்போர் நலன் காக்கப்பட வேண்டும்.
-- புதுக்கோட்டைத் தொடர் வண்டி நிலையம் , தொடர்வண்டிச் சந்திப்பாக மாற்றப்பட வேண்டும்.
-- திருச்சியிலிருந்து புதுக்கோட்டை காரைக்குடி வழியாகச் செல்லும் விரைவுவண்டிகள் கீரனூர், திருமயம் ஆகிய நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.
-- பிளாஸ்டிக் உற்பத்தியினைக் கட்டுப் படுத்த வேண்டும்.
-- தேசிய நுகர்வோர்க் குறைதீர் மன்றம் சென்னையில் நிறுவப்பட வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

          சண்முகா நகர்க் கிளை சார்பாக அதன் தலைவர் பாவலர்பொன்.கருப்பையா அவர்கள், டி.வி.எஸ் - மதுரைச் சாலை, மாலையீடு வழிபிரி மேடை விரிவாக்கப்பட்டு, வேகத்தடை அமைத்து விபத்துகள் தவிர்க்கப் படவேண்டும்,  மாலையீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கப் பட்டு, பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்., 

          புதுக்கோட்டையில் பல இலட்ச ரூபாய்கள் செலவில் நிறுவப்பட்டுச் செயல்படாமல் இருக்கும் போசுநகர் மின் எரி தகன மேடை செயலாக்கம் செய்யப் படல்வேண்டும் ஆகிய தீர்மானங்களை முன்வைத்தார்.

         மாவட்டத் துணைத் தலைவர் இரா.எ.இராமன், மேனாள் மாவட்டத் தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் தீர்மானங்கள் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் உரையாற்றினர். 

         மாவட்டத்தின் பல்வேறு கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அவ்வப் பகுதிக் குறைகளைப் பொதுக்குழுவில் பதிவு செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் வீ.செல்லப்பன் நிறைவாக நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment