Thursday, August 22, 2013

அழகிய புவியினில் அமைதி நிலவிட...

                
               22.08.2013 அன்று பிற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி தங்கம் கிரேஸ் அவர்கள் தலைமையேற்றார்.
            
              பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மாரிமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

              த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் அவர்கள் அணுஆயுதங்களால் ஆகும் அழிவுகள் பற்றியும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சப்பானின் இரு நகரங்கள் அணுகுண்டால் அழிக்கப்பட்ட அவலத்தையும் வரலாற்றுப் பின்னணியோடு  எடுத்துரைத்தார்.

               பாவலர் பொன்.கருப்பையா “ அழகிய புவியினில் அமைதி நிலவ...” எனும் தலைப்பில். உலகெங்கும் நடைபெறும் பயங்கர வாத நிகழ்வுகளையும், அவற்றால் மனிதகுலம் அழிவினையும் குறிப்பிட்டு, புவியி்ல் அமைதி நிலவ , மனிதநேயச் சிந்தனை இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

             அவர் மேலும் தனதுரையில் பண்டையத் தமிழகப் போர் நெறிமுறையில் பெண்டிர், குழந்தைகள், நோய்ப்பட்டோர், முதியவர்கள் பாதிக்கப்படாத அறமுறையினைச் சான்று காட்டி, அண்மையக் கால அணு ஆயுதப் போர்களால் பச்சிளங்குழந்தைகள்கூட அழிகின்ற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். 

            புவியில் அமைதி நிலவ அன்பு. கருணை, விட்டுக்கொடுக்கும் பண்பு, இன, மத, சாதிப் பாகுபாடில்லாத நேசம் வளர வேண்டும் என்பதைப் பாடல், கதைகளுடன் நகைச்சுவையாய் மாணவர்க்கு எடுத்துரைத்தார். 

           நிறைவில் பள்ளி வரலாற்றாசிரியர் திரு பொன்.தங்கராசு அவர்கள் நன்றி கூறினார்..

No comments:

Post a Comment